80 நாட்களுக்கு பிறகு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதில் ஒருவர் கைது!

தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வீசிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகளையும், உடைமைகளையும் தாங்கள் இழந்துள்ள நிலையில், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரவில்லை. அலுவலர்கள் யாரும் பார்க்கவில்லை. நிவாரண உதவிகளைக் கூடசெய்யவில்லை எனக் கூறி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் இருவேல் பட்டு கிராம மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் டிசம்பர் மாதம் காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ. மணிக்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அப்போதைய ஆட்சியர் சி.பழனி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்றனர். விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்ற போது அமைச்சர் பொன்முடி இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், காரிலிருந்து இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அங்கிருந்த இருவர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்பி பொன்.கௌதமசிகாமணி, அப்போதைய ஆட்சியர் பழனி சட்டைமீது தெறித்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் தீபக் ஸ்வாட்ச், ஜெயக்குமார் ஆகியோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உட்பட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தலைமறைவான இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சுமார் 80 நாட்களுக்கு பிறகு ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீஸார் இன்று கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தலைமறைவாக இருந்து வரும் பாஜக நிர்வாகி விஜயராணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!