அதிமுக நிர்வாகி கொலை ... திமுக பிரமுகர் உள்பட 3பேர் சரண்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே அதிமுக நிர்வாகி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் உட்பட 3பேர் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச்சாலையை அடுத்த கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர், கடந்த 1996 முதல் 2001 வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ள முத்து பாலகிருஷ்ணன், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முத்து பாலகிருஷ்ணன் பைக்கில் குறுக்குச்சாலை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சந்திரகிரி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
இதற்கிடையே, முத்து பாலகிருஷ்ணனின் மனைவியும், முன்னாள் பஞ்சாயத்து தலைவியுமான வள்ளியம்மாள், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு வழங்கினார். அதில், ‘‘உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எனது கணவரை சிலர் லாரி ஏற்றி கொலை செய்ததாக’’ தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உள்ளாட்சி தேர்தல் தகராறு மற்றும் தொழில் போட்டி காரணமாக முத்து பாலகிருஷ்ணனுக்கும், திமுக பிரமுகரான கருணாகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கருணாகரன் உள்ளிட்டவர்களின் தூண்டுதலின்பேரில், முத்து பாலகிருஷ்ணன் லாரி ஏற்றிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவர் விபத்தில் இறந்ததாக நாடகமாடியும் அம்பலமானது. இதையடுத்து கைதான டிரைவர் சவுந்திரராஜன் மீதான விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
மேலும் இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக கருணாகரன், அவருடைய உறவினர்களான மகேஷ், கற்பகராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் கருணாகரன், மகேஷ், கற்பகராஜ் உள்ளிட்ட 3 பேரும் மணியாச்சி டிஎஸ்பி அருள் முன்பு சரணடைந்தனர். அவர்களிடம் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வைத்து ஏடிஎஸ்பி சகாய ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!