நடுரோட்டில் அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) என்பவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரீஷ், அதிமுக பிரமுகராகச் செயல்பட்டதோடு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவரான பிரசாந்த் என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கார் ஓட்டுநர் தொழிலுடன், ரியல் எஸ்டேட் தொழிலும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் இவர் நடத்தி வந்துள்ளார்.
ஹரீஷ் மற்றும் ஓசூர் வானவில் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் பெண் தனது கணவரைப் பிரிந்து மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று சாப்பிட்ட ஹரீஷ், பின்னர் அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர் - அண்ணாமலை நகர் இடையே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மாருதி நகர் பகுதியில் வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.
அரிவாள் வெட்டுக்குப் பயந்து ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த ஹரீஷ் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியது. இதில் கை, தலை உட்படப் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட ஹரீஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலைக்குப் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
நேற்று நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள் ஹரீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஓசூர் அட்கோ காவல் நிலையத்திற்குக் தகவல் அளித்தனர்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரீஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் இந்தச் சம்பவத்தைக் குறித்துப் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இந்தக் கொலை நடந்ததா, அல்லது ரியல் எஸ்டேட், வட்டிக்குப் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் ஏற்பட்ட மோதல் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
