பாஜக கூட்டணியில் அதிமுக., பாமக... இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் அமித்ஷா!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் திருவிழா இப்போதே களைக்கட்ட துவங்கியிருக்கிறது. இந்நிலையில் பாஜக கூட்டணி குறித்து இன்று அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தமிழக பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் அமித்ஷா. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி மலரும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன. அதற்கேற்ப எடப்பாடியார் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். திடீர் திருப்பமாக சத்தமில்லாமல் செங்கோட்டையன் தனி ரூட் எடுத்து, டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடனான சந்திப்பின் போது, "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றினால் தங்களுடன் கூட்டணி அமைக்க சம்மதம்" என எடப்பாடி பேசியதாக பரபரப்பாக கூறப்பட்டது.
எடப்பாடியுடனான சந்திப்பின் பின்னர், தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்த அமித்ஷா, "2026 தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று கூறியிருந்தார். இதனால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை ஓரளவு யூகிக்க முடிந்தது.
இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் மத்திய மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்னை வந்தார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இன்று காலை அமித்ஷா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்துக்கு சென்று அவரை சந்திக்க இருக்கிறார். அதன் பின்னர் மீண்டும் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பும் அமித்ஷா, தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக, பாமக இணைவது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!