மார்ச் 6ம் தேதி கனிமவளக் கொள்கையை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

 
அதிமுக
 


 
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு தினமும்  பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை  அதிமுக சார்பில் நாளை மறுநாள் மார்ச் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!
இது குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 45 மாதங்களாக நடைபெற்று வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், கனிம வளக் கொள்ளை ஊழல் முறைகேடுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி, தொடர் பாலியல் வன்கொடுமைகள் என, பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதல்வர்  ஸ்டாலின், இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு தினமும்  பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.  தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாக்கிறது.

அத்துடன்  தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.  

கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் இருந்து கல், M-சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் சட்டவிரோதமாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும்; இதுகுறித்து, அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என பலமுறை கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு கடிதம் அளித்தும்; மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு, கழகத்தின் சார்பில் பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதிமுக

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், 6.3.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. K.T. ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C. கிருஷ்ணமுரளி, M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உட்பட  பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web