அஜித் குமார் விவகாரம்... மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். போலீசாரின் கொடூர தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில், 6 காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ் நீதி விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையான விசாரணை நடத்தி ஜூலை 8ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜான்சுந்தர்லால் இன்று 2 வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை முடிந்து ஜூலை 8 தேதி நீதிபதி ஜான்சுந்தர்லால் விரிவான அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பின்னரே, இந்த வழக்கு சிபிஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் அஜித்குமார் மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!