தினந்தோறும் 2 இடங்களில் செக்கிங்... மீறினால் லைசன்ஸ் ரத்து... பேருந்து ஓட்டுநர்களுக்கு செக்!

தமிழகம் முழுவதும் தினந்தோறும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு 2 முறை செக்கிங் செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமீப காலங்களாக அரசு பேருந்து ஓட்டுநர்களில் பணி நேரத்தில், அதிகமானோர் மது போதையில் பேருந்தை இயக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இந்த உத்தரவு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்தி விட்டு, வாகனங்களை இயங்குவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்தப் பகுதி வழியாக வரும் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மது அருந்தி உள்ளனரா என்பது குறித்து சோதனை கருவி மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தச் சோதனையில் ஈடுபட்ட மாநகரப் போக்குவரத்து உதவி கமிஷனர் அசோக்குமார் அங்கிருந்த ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
அப்போது அவர் “தினந்தோறும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சுமார் 40 தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு செல்கின்றன. இனி நெல்லை மாவட்டத்தில் தினசரி 2 இடங்களில் சோதனை செய்யப்படும். அந்த சோதனையின் போது ஓட்டுநர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவர்களுக்கு வேறு எந்த பகுதியிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காத வகையில் செய்யப்படும். எனவே ஓட்டுநர்கள் மது அருந்தாமல் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் மேலும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதே சமயம், அதிகளவில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவது தொடர்கதையாகி வருகிறது. இதை எல்லாம் அதிகாரிகள் தட்டிக் கேட்பதில்லை என்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் முணுமுணுத்தப்படியே கலைந்து சென்றனர்.
இது குறித்து கூறுகையில், ஆம்னி பேருந்துகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது, கணக்கை ஒப்படைப்பது, லக்கேஜ் ஏற்றுவது என்று நடுவழியே இரண்டு மூன்று இடங்களில் அலுவலகங்கள் இருக்கும். அப்படியெல்லாம் மது அருந்தி விட்டு பேருந்தை ஓட்டினால் வேலையை விட்டு நீக்கி விடுவார்கள். அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அப்படியான சிக்கல்கள் இல்லை. அதனால் எங்களைச் சோதனைச் செய்வது தவறு கிடையாது. அதே போன்று அரசு பேருந்து ஓட்டுநர்களையும் சோதனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் விபத்துக்களை கணிசமாக குறைக்கலாம் என்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!