உஷார்... சொத்து வரி கட்டலைன்னா வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி... மாநகராட்சி நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

உஷார் மக்களே... சொத்துவரி கட்டலைன்னா வீட்டு வாசலில் குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மதுரையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் இருப்பதால் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக சொத்து வரி கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கும் கட்டிடங்களின் முன்பு குப்பைத் தொட்டி வைக்கப்படும் மதுரை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சொத்துவரி நீண்ட காலம் கட்டாமல் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள் மட்டுமல்லாமல் வீடுகள் முன்பும் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் கொண்டு வரும் 'குப்பை தொட்டி'களை வைத்து வரி கட்ட கூறி கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மூலம் ஆண்டிற்கு மாநகராட்சிக்கு ரூ.247 கோடி வருவாய் கிடைக்கிறது. கடந்த அரையாண்டு வரை ஓரளவு சொத்து வரி தீவிரமாக வசூல் செய்யப்பட்டதால் தமிழக அளவில் சொத்து வரி வசூலில், மதுரை மாநகராட்சி மூன்றாம் இடம்பிடித்தது. ஆனால், தற்போது சொத்து வரி வசூலில் மந்தம் ஏற்பட்டதால் 2 நிலை கீழே இறங்கி 5வது இடத்தில் மாநகராட்சி பின்னுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு மானியம் கிடைக்க, மாநகராட்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 சதவீதம் சொத்து வரி வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை மதுரை மாநகராட்சி மத்திய அரசு நிர்ணயித்துள்ள சொத்துவரி வசூல் இலக்கை எட்டாததால் ஆணையாளர் சித்ரா உத்தரவின்பேரில், 100 வார்டுகளிலும் சொத்து வரி வசூல் செய்வதற்கு தற்போது கிளர்க்குகள், பில்கலெக்டர்கள், சூப்பரெண்டுகள், வருவாய் பிரிவு உதவி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருமே வரிவசூலில் களம் இறங்கி விடப்பட்டுள்ளனர்.
மண்டலம் வாரியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் அதிகம் சொத்துவரி பாக்கி வைத்துள்ள முதல் 50 முதல் 100 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பவது, நேரடியாக மாநாராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் வீடு தேடி சென்று சொத்து வரி கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தும் பணியும் நடக்கிறது.
அதையும் மீறி கட்டாத கட்டிட உரிமையாளர்களை சொத்து வரி கட்ட வைப்பதற்கு, அவர்கள் கட்டிடங்கள் முன் குப்பை தொட்டிகளை வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் பில்கலெக்டர்கள் சொத்து வரி பாக்கி பட்டியலை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மேற்பார்வையில் லாரிகளில் கொண்டு வரப்படும் குப்பைத் தொட்டிகளை, சொத்து வரி கட்டாமல் தாமதப்படுத்தும் கட்டிடங்கள் முன் இறக்கி வைத்து செல்கிறார்கள்.
குப்பைத் தொட்டிகளை வைப்பதால் சம்பந்தப்பட்ட சொத்து வரி கட்ட முடியாத வீடு, வணிக வளாகங்களுக்கு அதன் உரிமையாளர்கள், அன்றாடம் செல்லக்கூடியவர்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள். மேலும், கட்டிடங்கள் முன் வைப்பதால் குப்பை தொட்டியின் நாற்றத்தின் நெடி கட்டிடங்களின் உள்ளே யாரும் இருக்க முடியாத அளவிற்கு வீசும். மேலும், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் மத்தியில் மாநகராட்சியின் இந்த குப்பை தொட்டி வைக்கும் நடவடிக்கையால் அவமானத்தையும் சம்பந்தப்பட்ட சொத்துவரி கட்டாதவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.
அதனால், ஓடி வந்து சொத்தவரியை கட்டுவார்கள் என்ற அடிப்படையில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, வரிவசூலில் முன்னேற்றத்தைக் கொடுத்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!