கற்களை வீசிச் சிறுத்தையை விரட்டிய 11 வயது சிறுவன்... உயிரைக் காப்பாற்றிய புத்தகப்பை!
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மயங்க் குவாரா, திடீரெனத் தாக்கிய சிறுத்தையிடம் இருந்து சமயோசிதமாகக் கற்களை வீசித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில், அவனது புத்தகப்பைதான் அவனது உயிரைக் காப்பாற்றிய முக்கியக் கருவியாக இருந்துள்ளது.
பல்கார் மாவட்டத்தைச் சேர்ந்த மயங்க் குவாரா, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவம்பர் 21) மாலை, பள்ளி முடிந்து அவன் மற்றொரு சிறுவனுடன் வழக்கம்போல் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அப்போது பாதையின் ஓரத்தில் இருந்த புதர்களுக்கு நடுவே மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் சிறுவர்கள் இருவர் மீதும் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த சிறுவர்கள், அச்சத்தில் உறைந்து போனார்கள். அந்த ஆபத்தான தருணத்திலும், 11 வயது சிறுவன் மயங்க் குவாரா சற்றும் பதறாமல் சமயோசிதமாகச் செயல்பட்டான். சுதாரித்துக் கொண்ட அவன், கீழே கிடந்த கற்களை எடுத்து சிறுத்தையின் மீது சரமாரியாக வீசினான். அவனுடன் இருந்த மற்றொரு சிறுவனும் இதில் சேர்ந்து கொண்டு சத்தமாகக் கத்தி கூச்சல் போட்டபடி சிறுத்தையை நோக்கிக் கற்களை வீசினான்.

சிறுவர்களின் துணிச்சலான சத்தம் மற்றும் கற்கள் வீச்சைக் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்தனர். இதனைக் கண்ட சிறுத்தை, தாக்குதலை நிறுத்திக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து வனப்பகுதிக்குள் மறைந்தது.
இந்தச் சம்பவத்தில், சிறுவன் மயங்க்கின் கையில் சிறுத்தையின் நகங்கள் கீறியதால் லேசான காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாகச் சிறுவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலின்போது, சிறுவன் மயங்க் அணிந்திருந்த புத்தகப்பை தான் அவனது உயிரைக் காப்பாற்றிய முக்கியக் கவசமாகச் செயல்பட்டது தெரிய வந்தது. பின்புறத்திலிருந்து சிறுத்தை தாக்கிய போது, முதுகில் இருந்த புத்தகப்பை தாங்கு பலமாக இருந்ததால், சிறுத்தையின் பிடியில் இருந்து மயங்க் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளான்.
சிறுத்தையைத் துணிச்சலுடன் விரட்டி, உயிரைக் காப்பாற்றிக் கொண்ட இந்தச் சிறுவர்களின் வீரச் செயலை அறிந்த வனத்துறையினர், அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
