இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாகவும், அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளாலும் தமிழகத்தில் இன்று (நவம்பர் 24) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட தகவலின்படி, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் (நவம்பர் 22) நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 24) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், அதாவது நவம்பர் 26 அன்று, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும். அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில், அரபு மொழியில் 'சிங்கம்' என்று பொருள்படும் 'சென்யார்' (Senyar) எனப் பெயரிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புயல் தமிழகத்தைத் தாக்குமா, எங்கே கரையை கடக்கும் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகைப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவம்பர் 25) வாக்கில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறினார். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் நவம்பர் 27 வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று (நவம்பர் 24) மாலைக்குள் கரைக்குத் திரும்புமாறும், இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
