ஏப். 1 முதல் திடக்கழிவு மேலாண்மை கட்டாயம்... மீறினால் கடும் நடவடிக்கை - உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் இனி மெத்தனமாக இருக்க முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
வீடுகளிலேயே குப்பைகளை ஈரமான குப்பை, உலர் குப்பை மற்றும் தீங்கு விளைவிக்கும் குப்பை எனத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற விதிமுறை இனி நாடு முழுவதும் முழுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் சட்டப்பூர்வ கடமையாகும். உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளைக் கையாள்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்களது செயல்பாடுகளைப் புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு முதல் கட்டமாக அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்களை உடனுக்குடன் விசாரிக்க 'நடமாடும் நீதிமன்றங்களை' அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் பங்கஜ் மிதால் மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, "இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே இல்லை" என்று எச்சரித்துள்ளது. குப்பைகளைச் சரியாக மேலாண்மை செய்யாவிட்டால் அது ஆரோக்கியத்தை மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், கழிவுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்குப் பெரும் சவாலாகவும், அதே சமயம் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
