காதலிக்க மறுத்த மாணவியை எரித்துக் கொல்ல முயற்சி... வாலிபர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 2பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார். அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதையடுத்து 17 வயது மாணவி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி காவல் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகும், சந்தோஷால் பிரச்சனை வந்ததால் மாணவியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். மாணவி அதன் பின்னர் தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23ம் தேதி மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் மாணவி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.
மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!