பகீர்.. காஸாவில் இடிந்த கட்டிடங்களில் 10,000+ உடல்கள்... உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள்!

 
காஸா

இஸ்ரேல் படைகளின் தொடர் மற்றும் உக்கிரமான தாக்குதல்களால் காசாவில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 10,000க்கும் அதிகமான உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று காசா குடிமைப் பணியாளர்கள் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்த உடல்களை மீட்கும் பணி சாதாரணக் காரியமல்ல என்றும், போருக்குப் பிறகான சவாலாக இது உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

காசா நகரின் கிழக்குப் பகுதியான அல்-சாஹா பகுதியில் செப்டம்பர் 17ம் தேதி நடந்த ஒரு சம்பவத்தை மீட்புப் பணியாளர் நூஹ் அல்-ஷக்னோபி (24) பகிர்ந்துகொண்டார். இஸ்ரேல் படைகள் ஒரு வீட்டின் மீது குண்டுவீசியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் பெரும்பாலானவை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தன.

அல்-ஷக்னோபியின் குழு இரண்டு சிறுமிகளின் உடல்களை வெளியே எடுத்த பின்னரும் தொடர்ந்து தோண்ட வேண்டியிருந்தது. உயிரோடு யாரேனும் இருக்கிறார்களா என்று பார்க்க, இடிந்து விழுந்த தரைத் தளங்களின் கீழ் அவர்கள் ஊர்ந்து சென்றனர். நூஹ் அல்-ஷக்னோபி 'இன்டெர்செப்ட்' ஊடகத்திடம் கூறுகையில், "யாரேனும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை இருந்தால்தான் நாங்கள் கீழே செல்வோம். இல்லையெனில், மேலிருந்து கீழ் நோக்கித் தோண்டுவோம். அதன்பிறகு நாங்கள் கண்டது பயங்கரமானதொரு கனவை விடவும் கொடூரமான நிஜம்" என்றார்.

காஸா

மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் 12 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்றனர். அங்கு உடைந்த கால்கள், கைகள், அத்துடன் தாயின் உடல் அதை இறுக அணைத்து இறந்துபோன குழந்தை என்று பல உடல்கள் கிடந்தன. இந்த அனுபவம் குண்டுவீச்சுத் தாக்குதலின் தாக்கத்தை அவர்களுக்கு உணர்த்தியது.

இந்த இடிபாடுகளின் ஆழத்திலிருந்து ஒரு சிறுமி "நான் இங்கே... நான் இங்கே..." என்று ஈனமாக முனகுவது அவர்களுக்குக் கேட்டுள்ளது. உடனடியாக விரைந்து சென்று அந்தச் சிறுமியைக் காப்பாற்றியுள்ளனர். உயிர் காக்கும் ஒரு குரல் கேட்டால், இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயங்குவதில்லை.

இரண்டு ஆண்டுகள் நீடித்த தாக்குதல்களுக்குப் பிறகு, காசா குடிமைப் பாதுகாப்புப் படையில் சுமார் 900 பணியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால், அதன் செயல்திறன் 90% குறைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

காஸா

கனரக இயந்திரங்கள் இல்லாத சூழலில், அவர்கள் சுத்திகள், கோடரிகள், கரணைகள் போன்ற எளிய கருவிகளையே பயன்படுத்துகின்றனர். இதனால், ஓர் உடலை மீட்பதற்கே பல நாட்கள் ஆகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஓர் உடலை சுவர் அல்லது மாடியின் கீழ் இருந்து மீட்கவே 10 முதல் 12 மணி நேரங்கள் வரை ஆகும் என்று மற்றொரு வீரரான அல் கம்மாஷ் (25) கூறுகிறார்.

போரின் தொடக்கத்தில் உடல்களைப் பார்க்கவே முடியாத அளவுக்கு வேதனையுடன் இருந்த ஷக்னோபி, இப்போது உணர்ச்சியற்ற ஒரு மரக்கட்டையாகவே மாறிவிட்டதாகக் கூறுகிறார். அவருடைய வீட்டையும் இழந்து, குடும்பம் இடம்பெயர்ந்துள்ள சூழலில், போரில் இறந்த தன் அத்தையின் உடல்கூட இந்த 10,000 உடல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

இடிபாடுகளில் கிடக்கும் உடல்கள் அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசுவதால் அருகில் செல்ல முடியாத நிலை உள்ளது. டி.என்.ஏ. சோதனைகள் இல்லாததால், உறவினர்கள் உடைகளை, மோதிரங்களை வைத்து மட்டுமே உடல்களை அடையாளம் காண வேண்டிய அவல நிலையில் உள்ளனர். அடையாளம் தெரியாத உடல்கள் பெயரில்லா கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றன.

"போர் நிறுத்தம் வந்தால் மக்கள் மூச்சு விடலாம்; ஆனால் எங்களைப் போன்ற பணியாளர்களுக்கோ போர் முடிந்த பிறகுதான் உண்மையான போரே தொடங்குகிறது -  அது உடல்களை மீட்கும் பணி," என்கிறார் அல்-ஷக்னோபி.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!