இந்தியா அடுத்த அதிரடி... பாகிஸ்தான் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை!

இந்தியாவில் ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 1. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், 2. அட்டாரியில் உள்ள சோதனைச்சாவடி மூடல் 3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். 4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். 5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வான்வழி பயன்பாட்டில் கட்டுப்பாடு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் தடை விதித்து இந்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கான தடை உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 2024 – 2025 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா 447.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளது. அதேசமயம் வெறும் 0.42 யுஎஸ் டாலர் மதிப்பிலான சொற்பமான அளவிலேயே இறக்குமதி செய்திருப்பது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்ற கணிப்பில் இந்தியா இறக்குமதி தடையை அமல்படுத்தினாலும் கூட பாகிஸ்தான் பதறுவதாகத் தெரியவில்லை. இந்தியாவின் உடனடி 5 நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வதாகக் கூறியது. மேலும், இன்று (மே 3) 450 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ராணுவம் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், நவீன ஆயுதங்களின் தரநிலையை பரிசோதனை செய்யவும் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!