நிக்கோடின் பவுச்சுகள் விற்கத் தடை... மீறினால் சிறை! - தமிழக அரசு எச்சரிக்கை!
தமிழகத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே நிக்கோடின் பவுச்சுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நிக்கோடின் பவுச்சுகள் என்பவை புகையிலை இல்லாத, ஆனால் அதிகப்படியான நிக்கோடின் அடங்கிய சிறிய பைகள் ஆகும். இவை உதட்டின் கீழ் வைத்துப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை நிக்கோடின் பவுச்சுகளின் பாதுகாப்புத் தன்மை மற்றும் மருத்துவத் திறன் இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அல்லது மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாதவை.
இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் கடுமையான இதய நோய்கள், நரம்பியல் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அங்கீகரிக்கப்படாத ஓரல் நிக்கோடின் பவுச்சுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மருந்துக் கடைகள் அல்லது இதர விற்பனை நிலையங்களில் இவை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள், குறிப்பாகப் இளைஞர்கள், இத்தகைய போதைப் பொருட்களின் ஆபத்தை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கடைகளில் இது போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டால், உடனடியாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
