13 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம்–பாகிஸ்தான் நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
வங்காளதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறது. ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானுடனான நேரடி விமான சேவை, தற்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டுக்குப் பிறகு வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை இயங்கவில்லை. முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டார் வங்காளதேசம் வந்து, விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, வரும் 29ம் தேதி முதல் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. வாரம் இரண்டு நாட்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும். டாக்காவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 11 மணிக்கு கராச்சி சென்றடையும். கராச்சியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் விமானம், மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு டாக்கா சென்றடையும். இந்த விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்துமா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
