உஷார்... யூ-ட்யூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு!
சமூக வலைதளங்களில் பகிரப்படும் மருத்துவக் குறிப்புகளை மருத்துவரின் ஆலோசனையின்றி பின்பற்றுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி (19), கல்லூரியில் படித்து வந்தார். தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கலையரசி, இதற்காக யூடியூப்பில் உள்ள சில வீடியோக்களைப் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் சொல்லப்பட்ட ஆலோசனையின்படி, நாட்டு மருந்துக் கடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக ‘வெங்காரம்’ வாங்கி, அவற்றை யூ-ட்யூப் வீடியோவில் கூறியிருந்தப்படி உட்கொண்டுள்ளார்.

மருந்து சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்குக் கடும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கலையரசி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மகளின் மரணம் குறித்துத் தந்தை வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலையரசி எந்த வீடியோவைப் பார்த்தார்? அவர் வாங்கிய மருந்து என்ன? அந்த மருந்து காலாவதியானதா அல்லது அதன் வீரியம் அதிகமாக இருந்ததா? என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"சமூக வலைதளங்களில் வரும் மருத்துவத் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. முறையான மருத்துவப் படிப்பை முடிக்காதவர்கள் பகிரும் வீடியோக்களைப் பார்த்து மருந்துகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்" என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
