உஷார்... வடதமிழகம் நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்... 9 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை 11.30 மணியளவில் 'டிட்வா' புயலாக வலுவடைந்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏமன் நாடு பரிந்துரைத்த இந்தப் புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தற்போது புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலானது, வருகிற நவம்பர் 30-ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய ஆந்திரக் கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.

அதி கனமழை: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை): ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை (கனமழை): தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (நவம்பர் 29) சென்னை உட்பட வடமாவட்டங்களில் மழை தீவிரமடையும். புயல் வடதமிழகத்தை நெருங்குவதால், நாளை மழைப்பொழிவு தீவிரமடையும். மொத்தமாக இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை (அதி கனமழை): நாளை (சனிக்கிழமை) திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை (மிக கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) புயல் கரையை நெருங்கும் சூழலில், வட மாவட்டங்களில் மழை நீடிக்கும். கன முதல் மிக கனமழை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று முதல் நாளை வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை தரைக்காற்று வீசக்கூடும். ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
