உஷார்... நாளை அமலுக்கு வருகிறது... SBI வங்கியில் இந்த சேவை நிரந்தரமாகக் கிடையாது!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.ஐ. வழங்கி வந்த mCASH எனப்படும் எளிமையான பணப் பரிவர்த்தனை சேவை, டிசம்பர் 1ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
mCASH சேவை என்பது, எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள், பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்யாமல், அவருடைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை மட்டும் பயன்படுத்திப் பணம் அனுப்ப அனுமதிக்கும் ஒரு சேவை ஆகும்.
mCASH மூலம் பணம் பெறுபவருக்கு ஒரு பாதுகாப்பான இணைப்பு (Link) மற்றும் 8 இலக்க கடவுச்சொல் (Password) கிடைக்கும். அதைக் கொண்டு அவர்கள் எந்த வங்கிக் கணக்கிலும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது பழைய தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த எளிமையான பணப் பரிமாற்ற முறையாகும்.

எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று (நவம்பர் 30) தேதிக்குப் பிறகு, ஆன்லைன் எஸ்.பி.ஐ. (OnlineSBI) மற்றும் யோனோ லைட் (YONO Lite) ஆகிய தளங்களில் mCASH மூலம் பணம் அனுப்பும் மற்றும் பணம் பெறும் வசதி (Claiming) இனிமேல் செயல்படாது.
அதாவது நாளை டிசம்பர் 1ம் தேதி முதல், mCASH இணைப்பு அல்லது செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

mCASH சேவை நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, எஸ்.பி.ஐ. மாற்றுப் பரிவர்த்தனை முறைகளைப் பரிந்துரைத்துள்ளது.
பழைய தொழில்நுட்பத்தில் இயங்கிய mCASH சேவைக்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் பின்வரும் நவீன மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தலாம்: BHIM SBI Pay (UPI App): உடனடிப் பணப் பரிவர்த்தனைக்கான யுபிஐ (UPI) முறை. NEFT (National Electronic Funds Transfer): தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம். RTGS (Real-Time Gross Settlement): பெரிய தொகைக்கான நிகழ் நேரப் பரிவர்த்தனை. IMPS (Immediate Payment Service): உடனடிப் பணப் பரிவர்த்தனை சேவை.
வங்கி தனது இணையதளத்தில், "mCASH வசதி நவம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்காது. மூன்றாம் தரப்புப் பயனாளிகளுக்குப் பணம் அனுப்ப (UPI, IMPS, NEFT, RTGS போன்ற) மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் mCASH சேவை நிறுத்தம் குறித்துக் கவலைப்படாமல், பாதுகாப்பான மற்றும் வேகமான யுபிஐ போன்ற மாற்று வழிகளுக்கு உடனே மாறுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் விரைவாகவும், அதிகப் பாதுகாப்பாகவும் நடக்கும் என்று எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் நம்புகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
