உஷார்... குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்... மருத்துவர்கள் எச்சரிக்கை!
தற்போது தமிழகம் முழுவதும் 'டித்வா' புயல் மற்றும் பருவமழையின் காரணமாகத் தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில், முதியோர் மற்றும் இணை நோயாளிகளுக்கு 'ஃபேஸ் பெராலிசிஸ்' எனப்படும் முக வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நேரடியாகக் குளிர்ந்த காற்று முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வு அளிக்கும் நரம்பில் திடீரென ஏற்படும் அழுத்தம், அழற்சி (inflammation) அல்லது கிருமித் தொற்றால் முக வாதம் ஏற்படுகிறது. இது பக்கவாதத்திலிருந்து (Stroke) வேறுபட்டது.

இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் வாயைக் குவிக்க இயலாது; உதடுகள் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும்; ஒரு பக்கக் கண்ணை முழுமையாக மூட முடியாது; பேசும்போது வாய் குளறும்; வாய்வழியாக உமிழ்நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். முதுநிலை பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா அவர்கள் இது தொடர்பாகக் குளிர்ந்த காற்று நேரடியாக முகத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்:
குளிர்ந்த தரையில், பாய், தலையணை அல்லது விரிப்பு இல்லாமல் படுப்பதையோ, ஒரு பக்கக் கன்னத்தை நேரடியாகக் குளிர்ந்த தரையில் வைத்துப் படுப்பதையோ தவிர்க்க வேண்டும். இது நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி முகவாதம் ஏற்பட வழிவகுக்கும். கார், பேருந்து அல்லது ரயில் பயணங்களின்போது அதிக நேரம் குளிர்ந்த காற்று காது அல்லது கன்னத்தில் படுவதைத் தவிர்க்க வேண்டும். ஏசி பயன்படுத்தும்போதும் குளிர்ந்த காற்று நேரடியாக முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், பூரணமாகக் குணமடையச் சுமார் 2 முதல் 4 மாதங்கள் ஆகும். அறிகுறிகளைக் கண்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஸ்டீராய்டு மருந்து மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து இயன்முறை சிகிச்சையும் (Physiotherapy) வழங்கப்படும். முக வாத பாதிப்புக்குள்ளானவர்களுக்குக் கண்கள் திறந்தே இருக்கும் என்பதால், விழிகள் வறட்சியடையாமல் இருக்கச் சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
