உஷார்... திருப்பதியில் கொடூரம்... பெண் குழந்தையைக் கடத்தி ரயிலில் பிச்சை எடுக்க வைத்த கும்பல் - 6 பேர் கைது!
திருப்பதியில், குப்பை சேகரிக்கும் தொழிலாளர்களின் 13 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை ரயிலில் பிச்சை எடுக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.
திருப்பதி சிந்தலச்செருவு பகுதியில் வசித்து வரும் சுசித்ரா - மஸ்தான் தம்பதியினரின் 13 மாத பெண் குழந்தை ஜெயஸ்ரீ, கடந்த 21ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனது. அதே பகுதியில் வசித்து வந்த வேலூரைச் சேர்ந்த முருகன் மற்றும் மரியம்மா என்ற தம்பதியினரும் மாயமானதால், அவர்கள் மீது சந்தேகம் கொண்டு பெற்றோர் காவல் நிலையத்தில் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.

மாவட்ட எஸ்.பி. சுப்பராயுடு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் சோதனையிட்டதில், முருகன் மற்றும் மரியம்மா குழந்தையை பைக்கில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சிக்கின. அவர்களது செல்போன் சிக்னல் மூலம் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், வேலூர் விருதம்பட்டு அருகே தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் மரியம்மாவைப் பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில், குழந்தையைக் கடத்திய பிறகு காட்பாடியில் இருந்து ஈரோடு வரை ரயில்களில் குழந்தையை வைத்துப் பிச்சை எடுத்து வந்ததை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். பிச்சை எடுத்து முடித்த பிறகு, குழந்தையை வேறு சில நபர்களுக்கு அவர்கள் விற்றுள்ளனர். இதனையடுத்து குழந்தையை வாங்கிய சந்திரம்மா, சின்ன கண்ணன், ஜெயபால் ராஜா, அனியம்மன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தை ஜெயஸ்ரீயைப் போலீசார் பாதுகாப்பாக மீட்டு திருப்பதிக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.25,271 ரொக்கம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிவிஎஸ் எக்செல் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கும்பல் ஏற்கனவே இதுபோன்ற குழந்தை கடத்தல்களில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் என கூடுதல் எஸ்.பி. ரவி மனோகரச்சாரி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
