உஷார்.. நோட் பண்ணிக்கோங்க... புத்தாண்டு முதல் தென்மாவட்ட ரயில்களின் நேரம் மாற்றம் - முழு விவரம்!
தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்த முக்கிய ரயில்களான நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்களில் அதிரடி மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1, 2026 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்குப் பயண நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்குத் தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632), தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு வருகிறது. வரும் புத்தாண்டு முதல், இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.50 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்குச் சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12662), இனி மாலை 6.45 மணிக்கு பதிலாக 5 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.50 மணிக்குப் புறப்படும். இருப்பினும், இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது காலை 5.55 மணிக்கே சென்னை எழும்பூரைச் சென்றடையும் வகையில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12694) ரயிலின் நேரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இனி 25 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.05 மணிக்குப் புறப்படும். இது மறுநாள் காலை 7.40 மணிக்குச் சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16102) ரயிலின் வேகம் பெருமளவு கூட்டப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், இனி காலை 6.05 மணிக்கே தாம்பரம் சென்றடையும். இதன் மூலம் சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பயண நேரம் மிச்சமாகும் என்பது பயணிகளுக்குக் கிடைத்த இனிப்பான செய்தியாகும்.

ஏன் இந்த மாற்றங்கள்?
ரயில்வே நிர்வாகத்தின் இந்த நேர மாற்றம் தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் ரயில்களின் வேகத்தை மேம்படுத்தி பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, முத்துநகர் எக்ஸ்பிரஸ் 25 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படுவது பயணிகளுக்குக் கூடுதல் அவகாசத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது.
புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி முதல் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் பயணத் திட்டத்தைத் திட்டமிடும் முன் புதிய ரயில் நேரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
