அப்பளமாய் நொறுங்கிய பி.எம்.டபிள்யூ கார்... கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலி; 3 பேர் கவலைக்கிடம்!
சென்னை அருகே திருப்போரூர் புறவழிச் சாலையில், மருத்துவ மாணவர்கள் பயணம் செய்த அதிவேக பி.எம்.டபிள்யூ (BMW) கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியதில், காரில் இருந்த எம்.பி.பி.எஸ். மாணவி மிஸ்பா பாத்திமா (21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவ உலகைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அபிநந்தன் (22), திருநெல்வேலியைச் சேர்ந்த செண்பக விநாயகம் (23), கேரளாவைச் சேர்ந்த முகமது அலி (21), வேலூரைச் சேர்ந்த மிஸ்பா பாத்திமா (21), நவ்யா (21) உட்பட மொத்தம் 10 மருத்துவ மாணவர்கள் இரண்டு கார்களில் மாமல்லபுரத்திற்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் அதனைச் சார்ந்த மருத்துவப் படிப்புகளை (எம்.பி.பி.எஸ். மற்றும் அலைட் ஹெல்த் சயின்ஸ்) 4ம் ஆண்டு படித்து வந்தவர்கள் ஆவர்.

நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட மாணவர்கள், கடற்கரைக்குச் சென்று நள்ளிரவு வரை இருந்துள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் அங்கிருந்து குரோம்பேட்டை நோக்கித் திரும்பியுள்ளனர். அதிகாலை நேரத்தில், திருப்போரூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது விறகு ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், ஓய்வு எடுப்பதற்காகச் சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தார்.
வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மருத்துவ மாணவர்கள் பயணம் செய்த பி.எம்.டபிள்யூ கார் பலத்த வேகத்துடன் வந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி, கூச்சலிட்டனர்.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த திருப்போரூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாகப் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை வெளியே மீட்டனர். காருக்குள் சிக்கியிருந்த 5 பேரில், வேலூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி மிஸ்பா பாத்திமா (21) என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்ற 4 மாணவர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நால்வரில் 3 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாரியை ஓட்டி வந்த கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் சுபாஷ் (40) என்பவரைக் கைது செய்த திருப்போரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் எதிர்கால மருத்துவராகப் பிரகாசிக்க வேண்டிய மாணவி ஒருவர், ஒரு நொடி கவனக்குறைவு மற்றும் அதிக வேகத்தால் உயிரிழந்த சம்பவம், மருத்துவக் கல்லூரி வட்டாரத்திலும், மாணவியின் சொந்த ஊரான திருநெல்வேலியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
