ஈரான் போர் எதிரொலி: தாகம் தீர்க்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு... எகிறியது குடிநீர் பாட்டில் விலை!
ஈரான் நாட்டுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தற்போது சாமானிய மக்களின் குடிநீர் பாட்டில்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலையேற்றத்தின் விவரப்படி, கடந்த வாரம் வரை 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 மில்லி குடிநீர் பாட்டில் தற்போது 10 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரு லிட்டர் பாட்டிலின் விலை 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும், ஐந்து லிட்டர் பாட்டிலின் விலை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும் அதிரடியாக அதிகரித்துள்ளது. மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களின் விலையும் 10 ரூபாய் உயர்ந்து, 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பெட்ரோலிய வேதிப் பொருட்களின் மூலமாகவே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. போர் காரணமாக பாலி எத்திலீன் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அத்தியாவசியத் தேவையான குடிநீரின் விலையும் உயர்ந்துள்ளது கவலையை அளிப்பதாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
