ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டிய மணமகன் - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில், திருமணத்திற்குச் சில மணி நேரமே இருந்த நிலையில், மணமகன் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டியதால், துணிச்சலாக அந்தத் திருமணத்தை மணப்பெண்ணே நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரேலியைச் சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண்ணுக்கும், ரிஷப் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தத்தின்போதே, மணமகள் குடும்பத்தினர் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் ரிஷப்பும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு வற்புறுத்தத் தொடங்கினர். அதன்படி மேலும் ரூ. 20 லட்சம் பணமும், ஒரு சொகுசு காரும் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டு மிரட்டியுள்ளனர். கூடுதல் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால், திருமணத்தை நிறுத்திவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மிகுந்த விரக்தி அடைந்த மணப்பெண் ஜோதி, வரதட்சணை கேட்டு மிரட்டும் ரிஷப்பைத் தான் திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார். ரிஷப் தனது குடும்ப உறுப்பினர்களை அவமதிப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும் கூறி ஜோதி திருமணத்தை நிறுத்தினார்.

திருமணத்திற்குச் சில மணி நேரமே இருந்த நிலையில், மணப்பெண்ணே இந்தத் துணிச்சலான முடிவை எடுத்ததால், அப்பகுதியில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணைக் கொடுமையைத் திருமணத்திற்கு முன்பே துணிச்சலுடன் எதிர்த்த மணப்பெண்ணின் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
