தங்கையை கேலி செய்த கும்பல் மீது அண்ணன் துப்பாக்கிச்சூடு!
மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் தொடர்ந்து கிண்டல் செய்து வம்பு இழுத்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்தப் பெண், தான் அண்ணனாக மதிக்கும் 51 வயது ஜெயன் சிவானந்தன் நாயரிடம் முறையிட்டுள்ளார். தங்கையாகக் கருதும் பெண்ணுக்கு நேர்ந்த அவமரியாதையைக் கண்டு கொதித்தெழுந்த ஜெயன், அந்தப் பசங்களை பலமுறை எச்சரித்தும் அவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை.
நேற்று முன்தினம் இரவு, அந்த இளம்பெண்ணை கேலி செய்த அப்துல்அசன், அக்பர்அப்துல் மற்றும் சமீர்அகமது ஆகிய மூவரும் ஒரு பள்ளியின் பின்புறம் நின்றிருந்தபோது, ஜெயன் மீண்டும் அங்கு சென்று அவர்களைக் கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெயன், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த 3 பேரையும் நோக்கிச் சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்த அக்பர்அப்துல் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழக்க, மற்ற இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய ஜெயனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த மற்ற இருவருக்கும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. "பெண்களைக் கேலி செய்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்" என்று ஒரு தரப்பினர் பேசினாலும், சட்டத்தைக் கையில் எடுத்து ஒரு உயிரைப் பறித்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
