இன்று அவனியாபுரத்தில் சீறிப்பாயும் காளைகள்... மதுரையில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு திருவிழா!
தமிழர்களின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், மதுரை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15) அவனியாபுரத்தில் மிகக் கோலாகலமாகத் தொடங்குகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய மாடுபிடி வீரர்கள் அவற்றை மல்லுக்கட்டி அடக்கும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் மதுரையில் குழுமி உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இன்று அவனியாபுரத்தைத் தொடர்ந்து, நாளை (ஜனவரி 16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜனவரி 17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காகக் காளைகள் மற்றும் வீரர்களின் முன்பதிவு கடந்த ஆண்டை விடப் பெருமளவில் அதிகரித்துள்ளது. அவனியாபுரத்தில் மட்டும் 3,090 காளைகளும், 1,849 வீரர்களும் களமிறங்கத் தயாராக உள்ளனர். தமிழக அரசு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
நாளை நடைபெறவுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார். உலகத்தையே உற்றுநோக்க வைக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நாளை மறுநாள் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீரர்களை உற்சாகப்படுத்த இந்த ஆண்டு பரிசுகள் மழையாகக் பொழிகின்றன. அவனியாபுரத்தில் சிறப்பாக விளையாடி அதிக மாடுகளைப் பிடிக்கும் வீரருக்குப் பரிசாக புத்தம் புதிய கார் வழங்கப்பட உள்ளது. வீரர்களிடம் பிடிபடாமல் வாடிவாசலில் கெத்தாக வெளியேறும் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரத் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களும் பரிசாக வழங்கப்படுகின்றன.
சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு காளையும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குச் செல்வதை உறுதி செய்துள்ள முதல்வர், "சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும்" என்றும், 2026 பொங்கல் திமுகவுக்கு 'வெற்றிப் பொங்கலாக' அமைய வேண்டும் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
