பேருந்து 30 அடி ஆழ ஆற்றில் பாய்ந்து 23 பேர் பலி... பலர் மாயம்!
வங்கதேச நாட்டின் தவுலத்தியா படகு முனையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், 40 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான பலரைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.தலைநகர் டாக்காவை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாதையான பத்மா ஆற்றைக் கடக்கப் படகுப் போக்குவரத்துதான் பிரதானம். நேற்று மாலை 40 பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்றை, மிதவைப் பாலம் வழியாகப் பெரிய படகில் ஏற்ற முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு சிறிய படகு அந்த மிதவைப் பாலத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து, அப்படியே 30 அடி ஆழமுள்ள பத்மா ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்து நடந்தவுடன் சுதாரித்துக் கொண்ட சில பயணிகள் ஆற்றில் நீந்தி உயிர் தப்பினர். ஆனால், பேருந்திற்குள் சிக்கிக்கொண்ட பலரால் வெளியே வர முடியாமல் போனது. இந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் ஒருவர், "நான் எப்படியோ நீந்தி கரை சேர்ந்துவிட்டேன். ஆனால், என் கண்ணெதிரே என் மனைவியும் குழந்தையும் தண்ணீருக்குள் மூழ்கியதைப் பார்த்தேன்" எனக் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது.
இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டாலும், நள்ளிரவு 11:30 மணியளவில் ராட்சத கிரேன் மூலம் பேருந்து முழுவதுமாக மேலே தூக்கப்பட்டது. பேருந்திற்குள் இருந்து சடலங்கள் வரிசையாக மீட்கப்பட்டு வருகின்றன. ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், மாயமானவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் எனப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
