அமலுக்கு வந்தது... ஊட்டி மலை ரயில் கட்டணம் திடீர் உயர்வு... சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!
நீலகிரி மாவட்டம், ஊட்டி மலை ரயிலின் கட்டணம் திடீரென 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலை ரயிலின் பராமரிப்புச் செலவு மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றைச் சமாளிக்கக் கட்டணத்தை உயர்த்துவது அவசியமாகிறது என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மலை ரயிலின் அடிப்படை கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சாதாரண மலை ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும். மேட்டுப்பாளையம் - ஊட்டி முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,000 ஆகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.550 ஆகவும் உள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர்: முதல் வகுப்பு ரூ.500, இரண்டாம் வகுப்பு ரூ.250. குன்னூர் - ஊட்டி: முதல் வகுப்பு ரூ.290, இரண்டாம் வகுப்பு ரூ.150. இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

முன்பதிவு கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், சிறப்பு ரயில்கள் மற்றும் முழு ரயிலை வாடகைக்கு எடுக்கும் சேவைகளின் கட்டணத்திலும் மாற்றமில்லை. கட்டண உயர்வுக்கு முன்னதாகவே பழைய விலையில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்ல பேருந்து கட்டணத்தை விட மலை ரயில் கட்டணம் அதிகமாக உள்ள சூழலில், தற்போது மேலும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர வர்க்க சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. இயற்கை அழகை ரசிக்க வரும் சாமானிய மக்களின் கனவாக இந்த ரயில் பயணம் மாறிவிடும் எனப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
