“வானத்தை போல மனம் படைத்த மன்னவன்” - 'கேப்டன்' விஜயகாந்தின் 2-வது நினைவு தினம்... இன்று நினைவிடத்தில் அஞ்சலி!
தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த 'கருப்பு எம்.ஜி.ஆர்' விஜயகாந்த் மறைந்து இன்றுடன் (டிசம்பர் 28, 2025) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. "ஈகை" குணம் கொண்ட அந்த மாமனிதரின் நினைவலைகள் இன்றும் தமிழக மக்கள் மத்தியில் நீங்காமல் நிலைத்திருக்கின்றன.
மதுரை மண்ணில் விஜயராஜாகப் பிறந்து, சினிமாவில் விஜயகாந்தாக உருவெடுத்தார். நிறத்தைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, தனது உழைப்பால் உயர்ந்தார். 1984-ம் ஆண்டு ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து எவராலும் முறியடிக்க முடியாத சாதனையைச் செய்தார். அவரது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மாபெரும் வெற்றி பெற்று, அவருக்கு 'கேப்டன்' என்ற நிரந்தரப் பெயரைத் தேடித்தந்தது.

நடிகர் சங்கம் கடன் சுமையில் தத்தளித்தபோது, அதன் தலைவராகப் பொறுப்பேற்று சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கடனை முழுமையாக அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களது வாழ்வில் விளக்கேற்றினார். இன்றும் திரைத்துறையினர் அவரை 'அன்னமிட்ட கைகள்' என்று போற்றுகின்றனர்.
2005-ல் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' (தேமுதிக) கட்சியைத் தொடங்கினார். 2006 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்தார். 2011 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.

உடல்நலக்குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி அவர் மறைந்தார். அவரது கலை மற்றும் பொதுச் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 'பத்ம பூஷன்' விருதை வழங்கி கௌரவித்தது.
இன்று விஜயகாந்தின் 2-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
