CBSE 10ம் வகுப்பு 2026 இரட்டை வாரியத் தேர்வுகள்... முதல் முயற்சி கட்டாயம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 10ஆம் வகுப்பில் 83 பாடங்களில் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 12ஆம் வகுப்பில் 120 பாடங்களில் 18,59,551 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இரண்டு வகுப்புகளையும் சேர்த்து இந்த ஆண்டு 43.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். தேர்வு மைய நுழைவு காலை 10 மணிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 10ஆம் வகுப்பில் கணிதம் முதல் தேர்வாக நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பில் உயிரி தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் சுருக்கெழுத்து பாடங்கள் முதலில் நடைபெறுகின்றன.
மாணவர்கள் நுழைவுச்சீட்டு, பள்ளி அடையாள அட்டை மற்றும் சீருடை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான தண்ணீர் பாட்டில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தேர்வுகள் நடைபெறும் நிலையில், பாரத் மண்டபம் அருகே நடைபெறும் AI இம்பாக்ட் உச்சி மாநாடு மற்றும் VVIP இயக்கம் காரணமாக மாணவர்கள் தாமதமின்றி தேர்வு மையங்களை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக டெல்லி காவல்துறை சிறப்பு போக்குவரத்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. முக்கிய VIP வழித்தடங்களில் உள்ள 10 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, மாணவர்களுக்கு உதவ தனி போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2026 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரட்டை வாரியத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் தேர்வில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது மூன்று பாடங்களில் தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க முடியாது. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சில முக்கிய பாடங்களில் மதிப்பெண்களை மேம்படுத்த மீண்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு டிஜிட்டல் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து ஆன்லைன் முறையில் மதிப்பீடு செய்யப்படும். அனைத்து பக்கங்களும் சரியாக எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் மதிப்பீட்டு பிழைகளை குறைத்து, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட உதவும் என வாரியம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
