சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்... ஏப்ரல் 5 வரை புதிய கால அட்டவணை அமல்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி நள்ளிரவு வரை, அதாவது சுமார் 45 நாட்களுக்கு இந்தப் புதிய நடைமுறை அமலில் இருக்கும்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் வழக்கமாக அங்கிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள், தற்காலிகமாக 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 324 மின்சார ரயில் சேவைகளில், சுமார் 160 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, தினமும் 164 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். இதில் 84 ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்தும், 80 ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சில மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம்: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் நோக்கிச் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடைக்கு வந்து செல்லும். இந்த 45 நாட்களுக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளுக்கெனத் தனியாகப் பின்பற்றப்படும் கால அட்டவணை நடைமுறையில் இருக்காது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதிய திருத்தப்பட்ட அட்டவணையின்படியே ரயில்கள் இயங்கும்.

மின்சார ரயில்களின் நடைமேடை மாற்றத்தால் விரைவு ரயில் சேவையிலும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் வரை வராமல் தாம்பரம் ரயில் நிலையத்திலேயே தனது பயணத்தை முடித்துக் கொள்ளும். அதேபோல் தாம்பரத்தில் இருந்தே ராமேஸ்வரத்திற்கு மீண்டும் புறப்பட்டுச் செல்லும்.
இந்தத் தற்காலிக மாற்றங்களால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, புதிய ரயில் எண்கள் மற்றும் திருத்தப்பட்ட நேரங்களுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் முன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்லது செயலிகள் மூலம் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
