தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்டவர்கள் இரங்கல்!

 
தலைமை காஜி

நேற்று மே 24ம் தேதி இரவு, தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூபின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ``தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.

அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


தலைமை காஜியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ் சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகள் செய்த பேரறிஞருமான சலாவுதீன் அயூப் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தலைமை காஜி சலாவுதீன் அயூப் அவர்களின் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

அவரது தொண்டினை நினைவுகூர்கின்ற வேளையில், அவரது ஆன்மா எல்லாம்வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். மேலும் அன்னாரது குடும்பத்தினருக்கும், இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த இரங்கல் பதிவில், தமிழ்நாடு அரசு தலைமை காஜி அல்லாமா முஃப்தி முஹம்மது சலாவுதீன் அயூப் காதிரி அஜ்ஹரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

காஜி

தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கிய தலைமை அலுவலகம் என அரசு வழங்கிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர். அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தலைமை காஜி அல்லாமா முஃப்தி முஹம்மது சலாவுதீன் அயூப் காதிரி அஜ்ஹரி அவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?