திருவாரூர் அரசுப் பள்ளியில் பாம்பு தீண்டிய 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிக்குச் சென்ற மாணவன் ஒருவன், வகுப்பறைக்குள் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர், அரித்துவாரமங்கலம், சேத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகானந்தத்தின் மகன் சிவப்பிரகாசம் (17). இவர் அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிவப்பிரகாசம், மதிய இடைவேளையின் போது உணவு சாப்பிடத் தனது பையைத் திறந்துள்ளார். உணவுப் பையிலிருந்த டிபன் பாக்ஸை எடுக்கும் போது, அதற்குள் மறைந்திருந்த விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு சிவப்பிரகாசத்தின் கையில் தீண்டியது.

பாம்பு தீண்டியதை அறிந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவனை மீட்டுத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 8, 2026) சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவனின் மரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்: வகுப்பறைக்குள் இருந்த புத்தகங்களை எடுக்கும் போதுதான் அங்கிருந்த பாம்பு தீண்டியதாக அவர்கள் கூறுகின்றனர். பள்ளி வளாகத்தைச் சரியாகப் பராமரிக்காததே பாம்புகள் வகுப்பறைக்குள் வரக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவன் உண்மையில் எப்படிப் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டார்? பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருந்தனவா? என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மழைக்காலங்கள் மற்றும் புதர் மண்டிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் அவ்வப்போது 'பாம்பு தடுப்பு மருந்துகளை' தெளிக்கவும், வகுப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் தமிழக கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவன், பள்ளிக்குச் சென்ற இடத்தில் உயிரிழந்தது திருவாரூர் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
