கோவை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... உ.பி. கொள்ளையர்களுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கைது!
கோவை மாநகர் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, கொள்ளையர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில், அவர்களுக்குத் தொடர்ந்து உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில், 13 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் 42 சவரன் நகை, ரூ. 1.5 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளையடித்து விட்டு, அதே ஆட்டோவில் திரும்பச் சென்றது தெரிய வந்தது.

தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப், இர்ஃபான், கல்லூ ஆரிஃப் ஆகிய மூன்று பேரைக் குனியமுத்தூர் அருகே ஒரு வீட்டில் வைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த மூவரும் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால், அவர்களைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது வலது காலில் துப்பாக்கி சுடப்பட்டதில் அதிக ரத்தம் வெளியேறியது உயிரிழப்புக்குக் காரணமாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மூவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மேலும் 12 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ வாகனப் பதிவை வைத்து, ஆட்டோ ஓட்டுநரான அயூப்கான் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட அவருடன் வசித்து வந்த நபர்களுக்கு அவர் அடிக்கடி ஆட்டோ ஓட்டி வந்ததும், பல்வேறு சமயங்களில் பல இடங்களுக்கும் அவரது ஆட்டோவையே கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அயூப்கானைக் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முக்கியக் கொள்ளையர்களுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநரே கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
