கோவை மாணவி பலாத்கார வழக்கு... 3 பேருக்கும் கொலை வழக்கிலும் தொடர்பு - குற்றப்பத்திரிகை தாக்கல்!
கோவை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான மூன்று குற்றவாளிகள் மீதான முதல்கட்டக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைதான அந்த மூவருக்கும், அருகில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் 2-ஆம் தேதி இரவு, 21 வயதான கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் பீளமேடு விமான நிலையம் பின்புறம் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), அவரது சகோதரர் கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மற்றும் மதுரை குணா என்ற தவசி (20) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 50 பக்கங்கள் கொண்ட முதல்கட்டக் குற்றப்பத்திரிகை, கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிந்து முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட குற்றப்பத்திரிகையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேருக்கும், அதே பகுதியில் நடந்த மற்றொரு கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2-ஆம் தேதி குரும்பபாளையத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவரான தேவராஜ் (55) என்பவர், செரயாம்பாளையம் காட்டில் மது அருந்திக் கொண்டிருந்த கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரைக் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த மூவரும் கட்டையால் தேவராஜைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
தேவராஜ் கொலை வழக்கிலும், அதே நாளில் கோவில்பாளையத்தில் நடந்த இருசக்கர வாகனத் திருட்டு வழக்கிலும் இந்த மூவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோவில்பாளையம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
