கல்லூரி மாணவியைக் கடத்தி ரூ.30 லட்சம் கேட்ட கும்பல் - துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்ட போலீசார்!
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், வெப் சீரிஸ் பாணியில் கல்லூரி மாணவி ஒருவரைக் கடத்தி பெரும் தொகையைப் பறிக்க முயன்ற கும்பலை, போலீசார் சினிமா பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்துள்ளனர். மதுரா கோட்வாலி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போலக் கல்லூரிக்குச் சென்றவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, மாணவியின் தந்தைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், உங்கள் மகள் எங்கள் பிடியில் இருக்கிறார், அவரை உயிருடன் மீட்க வேண்டுமென்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அந்த மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் சிக்னலை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தனர். கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடத்தை ரகசியமாகச் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை மோப்பம் பிடித்த கடத்தல் கும்பல், மாணவியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கடத்தல்காரர்கள் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட மாணவியை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்ட போலீசார், அவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குற்றவாளிகள் மூவரும் சமீபத்தில் வெளியான ஒரு பிரபல வெப் சீரிஸைப் பார்த்துவிட்டு, அதே பாணியில் ஆள் கடத்தி குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம் எனத் திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக அந்த மாணவியைத் திட்டமிட்டு நோட்டமிட்டுக் கடத்தியுள்ளனர். ஒரு வெப் சீரிஸைப் பார்த்துவிட்டு இளைஞர்கள் இத்தகைய பயங்கரமான குற்றச்செயலில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
