காங்கோ நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு!
காங்கோவில் நிலச்சரிவு உயிரிழப்புகள் 200 ஆக உயர்ந்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம். அள்ள அள்ள சடலங்கள் என்று அந்த பகுதி முழுக்கவே மயான பூமியாக காட்சியளிக்கிறது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்குப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு சுரங்கத்தில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
காங்கோவின் லுவாலாபா (Lualaba) மாகாணத்தில் உள்ள ஒரு செம்பு மற்றும் கோபால்ட் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் ஆழமான பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல்புறம் இருந்த மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.

விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான மலைப்பாங்கான பகுதி என்பதால், நவீன இயந்திரங்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. உள்ளூர் மக்கள் மற்றும் சக தொழிலாளர்கள் கைகளால் மண்ணைத் தோண்டி உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 200 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கோவில் உலகின் பெரும்பகுதி கோபால்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், பல ஏழை மக்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, அரசு அனுமதி பெறாத 'கைவினைச் சுரங்கங்களில்' உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர். இத்தகைய சுரங்கங்களில் காற்றோட்டம் மற்றும் உறுதித்தன்மை குறைவாக இருப்பதால், மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த விபத்து குறித்துக் கவலை தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள், பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தும் கோபால்ட் இத்தகைய ஆபத்தான சூழலில் எடுக்கப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
காங்கோ அரசு இந்தப் பகுதியில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
