பிப்ரவரி 28ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

 
செல்வப் பெருந்தகை

 தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஆதரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் 'தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கிற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  பிப்ரவரி 28 ம் தேதி  சென்னை வருகிறபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அந்த கருப்புக் கொடி இருக்க வேண்டும்,' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தர்மேந்திர பிரதான்


இது குறித்து அவர் “2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, தமிழக கல்வித் துறைக்கு சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூபாய் 2,152 கோடியையும், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை திறக்கவில்லை எனில் ரூபாய் 5,000 கோடியையும் வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு அறிவித்தார். இதை எதிர்த்து திமுக நடத்திய அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இக்கடிதத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மோடி அரசு இதை செய்தது, அதை செய்தது என்று ஒரு பசப்பு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக காசித் தமிழ்ச் சங்கமம் நடத்தப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவதற்கு தமிழக அரசின் ஆலோசனையையோ, ஒப்புதலையோ பெறுவதற்கு மத்திய அரசு என்ன முயற்சி எடுத்தது?
தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் முற்றிலும் புறக்கணித்து விட்டு, ஆளுநர் ஆர்.என். ரவியின் ஆலோசனையின்படி தமிழகத்திலிருந்து சிறப்பு ரயிலில் சிலரை அழைத்துச் சென்று காசியில் தங்க வைத்து நடத்தப்பட்டது தான் தமிழ்ச் சங்கமமா? தமிழ்ச் சங்கமம் என்ற போர்வையில் அரசு நிதியில் காவிகளின் சங்கமம் தான் அங்கே நடைபெற்றது. தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளை வளர்ப்பதற்கு பாரபட்சமில்லாமல் பாஜக எடுத்த நடவடிக்கைகள் என்ன?

காங்கிரஸ்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004ம் ஆண்டு சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோர் எடுத்த முயற்சியின் விளைவாக தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. அதற்கு பிறகுதான் சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. ஆனால், 2020-ல் சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்காக மூன்று மத்திய பல்கலைக் கழகங்களை மத்திய பாஜக அரசு திறந்திருக்கிறது. மூன்று சமஸ்கிருத பல்கலைக் கழகங்களுக்கு 100 சதவீத மானியத்தை கல்வியமைச்சகம் வழங்குகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த தகவலின்படி, சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்காக 2017 முதல் 2022 வரை ரூபாய் 1074 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு ரூபாய் 22.94 கோடி மட்டுமே வழங்கப்பட்டதோடு, சமஸ்கிருத மொழிக்கு கொடுத்ததைப் போல மானியமாக எதுவும் தரப்படவில்லை. 8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு ரூபாய் 22.94 கோடி.
ஆனால் 18,500 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூ 1074 கோடியா ? இதன்மூலம் சமஸ்கிருதத்தை திணிக்கிற மத்திய பாஜக அரசு, தமிழ் மொழியை வளர்க்க நிதி வழங்காமல் பாரபட்சம் காட்டுவது ஏன் ? தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு தலா ரூபாய் 3 கோடி நிதி இதே காலகட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக தென்னக மொழிகளை புறக்கணிக்கிற மத்திய பாஜக அரசு அப்பட்டமான ஓரவஞ்சனை காட்டுவது ஏன் ?
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயற்சி செய்தால் அதை எந்நாளும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. கடந்த கால தமிழக மொழி போராட்ட வரலாற்றை தர்மேந்திர பிரதான் அறியாத காரணத்தினால் தான் இந்தி மொழியை தமிழகத்தின் மீது திணிக்க சண்டித்தனம் செய்து வருகிறார். எந்த மொழியில் படிப்பது, எந்த மொழியை ஏற்பது என்ற உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது.
அன்று பிரதமராக ராஜீவ் காந்தி  , புதிய கல்விக் கொள்கையின்படி 1986ல் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டன. அதை தமிழக அரசு எதிர்த்த போது,  அதற்காக தமிழக கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ராஜீவ் காந்தி அரசு கூறவில்லை. ஆனால், தற்போது பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை அபகரித்துக் கொண்டு மும்மொழி திட்டத்தை தமிழகத்தின் மீது திணிப்பதன் மூலம் மோடி அரசின் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
பன்முக கலாச்சாரத்தைப் பற்றி தர்மேந்திர பிரதான் தமிழகத்துக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற அனைத்து மக்களையும் ஒன்றாக கருதுகிற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கருத்தியலின்படி செயல்பட்டு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் பன்முக கலாச்சாரத்தை சீரழிக்கிற வகையில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற அணுகுமுறையின் அடிப்படையில் செயல்படுகிற பாஜக தமிழகத்துக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியமில்லை.

இந்தி மொழி பேசுபவர்களுக்கு ஒரு மொழி திட்டம், இந்தி பேசாத மக்களுக்கு மும்மொழி திட்டம் என்பது மிகப்பெரிய அநீதியாகும். 1968 முதல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருமொழித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது, அதனை சீர்குலைக்க முயற்சிக்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே, மத்திய அரசு தமிழ் மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கு தொடர்ந்து முற்படுமேயானால், அதனால் ஏற்படுகிற கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தர்மேந்திர பிரதானை எச்சரிக்கிறேன்.

மேலும், தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கிற மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்  பிப்ரவரி 28 அன்று சென்னை வருகிறபோது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்ற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்,' எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web