அதிகாரியைச் சிக்க வைக்கப் பணத்தை மறைத்து வைத்து சதி... தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கைது!
திருநெல்வேலி மண்டலத் தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவை லஞ்ச வழக்கில் சிக்கவைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் இரவில் பணத்தை மறைத்து வைத்த சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாகத் தூத்துக்குடித் தீயணைப்பு வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மண்டலத் தீயணைப்புத் துறை துணை இயக்குநராகச் சரவணபாபு பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகத்தில் நவம்பர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது இருக்கைக்கு எதிரே இருந்த அலமாரியில், ஆறு கவர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவத்திற்குச் சற்று முன்னதாக நடந்த மர்மச் செயல்களை விசாரிக்க, துணை இயக்குநரின் அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நவம்பர் 17ம் தேதி அதிகாலை 12:10 மணிக்கு, கைகளில் கையுறை (கிளவுஸ்) மற்றும் முகமூடி அணிந்த ஒருவர், பணத்தைக் கவர்களில் கொண்டு வந்து அலுவலகத்தில் மறைத்து வைத்து விட்டுச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சதி குறித்துத் துணை இயக்குநர் சரவணபாபு, திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் அளித்தார். விசாரணையில், இது ஒரு பெரிய சதி நெட்வொர்க் என்று தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சரவணபாபு, 2021ம் ஆண்டு நாகர்கோவிலில் அதிகாரியாகப் பணியாற்றிய போது, இரண்டு பெரிய நிறுவனங்கள் போலியான தடையில்லாச் சான்றுகளை வைத்திருந்ததைக் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து, போலியான சான்றிதழ்கள் வழங்கியதாகச் சென்னையைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வீரரும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, பதவி உயர்வு பெற்ற சரவணபாபுவைப் பழிவாங்கத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக, தூத்துக்குடித் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஆனந்த் (வயது 30), மற்றும் அவரது அக்காள் மகன் முத்துசுடலை (29) ஆகியோர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சதி வலையத்தில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளையும், அவர்களுக்குத் துணையாக இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் சிலரையும் விரைவில் கைது செய்வோம் என்று இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
