"தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெத்துக்கோங்க... இந்தியா வல்லரசு ஆகிடும்" - சந்திரபாபு நாயுடு பேச்சு!
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும், உலக அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் (RSS) தலைவர் மோகன் பகவத் அவர்களுடன் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, பின்வரும் முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்: இந்தியா உலக அளவில் பொருளாதார வல்லரசாக மாற வேண்டுமானால், நமக்கு மிகப்பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் மற்றும் தொழிலாளர் சக்தி தேவை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், எதிர்காலப் பாதுகாப்புக்கும் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம். மக்கள் தொகை குறைந்தால், எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார்.

நாம் இப்போது மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் மட்டுமே, 2047-க்குப் பிறகும் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமை தாங்கும் நிலையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். குழந்தைகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், இந்திய இதிகாசங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்: "நமது ஆஞ்சநேயரின் வலிமை சூப்பர் மேனை விடவும், அர்ஜுனனின் வீரம் அயர்ன் மேனை விடவும் சிறந்தது. ஆனால் நமது குழந்தைகள் மேற்கத்திய சூப்பர் ஹீரோ கதைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்" என்று வருத்தம் தெரிவித்தார்.
அவதார் போன்ற நவீனத் திரைப்படங்களை விட நமது இதிகாசங்கள் மிகவும் ஆழமானவை. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாட்டைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புகட்ட வேண்டும். நீதியின் சின்னமாக விளங்கும் ராமர் மற்றும் கிருஷ்ணரின் வரலாற்றை மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும் என அவர் பேசினார்.

தற்போது 4 முதல் 5 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குள்ள இந்தியர்களின் தனிநபர் வருமானம் மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்திய மூளைகளும் உழைப்பும் உலகை வழிநடத்துவதாகப் பெருமிதம் கொண்டார். தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற விவாதம் அரசியல் தளத்தில் எழுந்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த "3 குழந்தைகள்" பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
