விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் மாணிக்கம் தாகூர் மனு தள்ளுபடி!

நடிகர் விஜயகாந்த் மகன் தேமுதிக விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் பல உண்மை தகவல்களை மறைத்துள்ளார். அவர் இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார், என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணிக்கம் தாகூர் எம்.பி. தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!