‘சென்யார்’ புயல் விலகியது... சென்னையை நோக்கி வேகமாக நகரும் புதிய புயல்! - அதி கனமழை எச்சரிக்கை!
அந்தமான் அருகே உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, தீவிரமடைந்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி, சென்னை நோக்கி நகர்ந்து கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகே நிலை கொள்ளவோ வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்திப் பகுதியில் உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்குச் சென்றதால், இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்த மழை வாய்ப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு இலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
புயலாக மாறிய பின், இந்த அமைப்பு வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ம் தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நிலப்பகுதிகளில் ஊடுருவி, பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு, நவம்பர் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலை கொள்ளவோ வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் மேலும் கூறியுள்ளார்.

புயலின் நகர்வால், டெல்டா பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பதிவாக வாய்ப்புள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் நவம்பர் 30ம் தேதி காலை வரை டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி காலை முதல் அடுத்த மாதம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாகக் கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வைப் பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்யும் சூழல் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரைக்கு அருகே வந்து நிலப்பரப்பில் ஊடுருவும் என்பதால், காற்றுப் பாதிப்பு அதிகம் இருக்காது, ஆனால் மழைக்கான சூழல் அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
