தமிழகத்தைத் தாக்கும் "டித்வா" புயல்... இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னைக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுப்பெற்று "டித்வா" புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் வட தமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளை நோக்கித் தீவிரமாக நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தின் காரணமாக, இன்று (நவம்பர் 28, வெள்ளிக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் அதி பலத்த மழை கொட்டித் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் "சிவப்பு எச்சரிக்கை" விடுத்துள்ளது.

இதைத் தவிர, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான "ஆரஞ்சு எச்சரிக்கையும்" விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: புயல் நகர்ந்து வருவதன் விளைவாக, மழைப்பொழிவு கடலோர வடதமிழகத்தை நோக்கி நகர்கிறது. நாளை (நவம்பர் 29, சனிக்கிழமை), திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உட்பட வடதமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் இன்று காலை முதல் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொது மக்கள் புயல் மற்றும் மழை எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
