'டிட்வா' புயல் நகர்வு: வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!
தமிழகத்தின் டெல்டா மற்றும் வட மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் 'டிட்வா' புயல், தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் வட தமிழகக் கடற்கரைப் பகுதிகளை இந்த புயல் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) நண்பகல் நிலவரப்படி, 'டிட்வா' புயல் பின்வரும் இடங்களில் மையம் கொண்டுள்ளது: வேதாரண்யத்திலிருந்து: 140 கி.மீ. தொலைவு, காரைக்காலிலிருந்து: தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவு, சென்னையிலிருந்து: தெற்கே 380 கி.மீ. தொலைவு

இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், இது வடக்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) காலை வட தமிழகத்தை நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிலப்பரப்பில் இருந்து விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளைப் புயல் இன்று காலை அடைந்துள்ளது. பொதுவாகக் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 63 கி.மீ. முதல் 83 கி.மீ. வரை இருந்தால் புயலாகக் கணக்கில் கொள்ளப்படும். தற்போது காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. ஆக உள்ளது.
வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கருத்துப்படி, புயல் டெல்டாவை அடையும்போது, அதன் மைய வேகம் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, புயல் தன்னுடைய சக்தியைப் புதுப்பித்துக்கொண்டு தீவிரமாகப் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள வானிலை நிலவரத்தின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) புயல் வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
இந்த புயலின் காரணமாக:டெல்டா பகுதியில் இன்றும் குறுகிய நேரத்தில் தீவிர கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது.வட கடலோர மாவட்டங்கள் (சென்னை உட்பட) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரையிலும் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
இத்தகைய தீவிரமான வானிலை எச்சரிக்கை காரணமாகவே, சம்பந்தப்பட்ட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
