டிச.30 சேலம் விஜய்... ஒரே நாளில் 3 இடங்களில் பிரச்சாரம்... உற்சாகத்தில் தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக அரசியலில் தனது அடுத்தகட்ட அதிரடி நகர்வுகளைக் கொங்கு மண்டலத்திலிருந்து தொடங்கியுள்ளார். இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த முக்கிய இலக்காகச் சேலம் மாவட்டத்தைத் விஜய் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. வரும் டிசம்பர் 30-ஆம் தேதி சேலத்தில் தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், ஒரே நாளில் மூன்று முக்கிய இடங்களில் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் இந்தச் சேலம் வருகைக்காகப் பலத்த முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. விமானம் மூலம் சேலத்திற்கு வருகை தரும் அவர், ஓமலூர், இரும்பாலை மற்றும் சீலநாயக்கன்பட்டி ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேச உள்ளார். இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கட்சியின் மிக முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

முன்னதாக இன்று ஈரோடு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்திற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு, மேற்கு மாவட்டங்களில் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் முதல் களமாக இது பார்க்கப்படுகிறது. 60 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் கருவிகள் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து சேலத்திலும் விஜய்யின் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
