திருமாவளவன் குறித்து அவதூறு... பாஜக ஆர்ப்பாட்டத்தில் செருப்பு வீச்சு!
தருமபுரி மாவட்டம் அரூரில் நேற்றுநடைபெற்ற பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விசிக மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. காவல்துறையினர் தடுத்தும் மீறி கற்களும், காலணிகளும் வீசப்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களமானது.
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்து, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் பேசிய பாஜக நிர்வாகிகள், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததோடு, விசிக தலைவர் திருமாவளவன் குறித்தும் சில அவதூறான கருத்துக்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த விசிகவினர் சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்தனர்.
"எங்கள் தலைவரைப் பற்றிப் பேச பாஜகவிற்குத் தகுதியில்லை; அவதூறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என விசிகவினர் முழக்கமிட்டனர். இது இரு தரப்பினரிடையே கடுமையான தள்ளுமுள்ளை ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த விசிகவினர், சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிகளைப் பிடுங்கி எறிந்தனர். மேலும், மேடையில் இருந்தவர்களை நோக்கிக் காலணிகளையும், கற்களையும் வீசித் தாக்க முற்பட்டனர். இது அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோதல் முற்றிய நிலையில், அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் அமமுக அமைப்புச் செயலாளர் ஆர்.ஆர். முருகன் உள்ளிட்டோர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், பாஜகவினரைக் கைது செய்ய வலியுறுத்தி விசிகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தருமபுரி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
