இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாகப் பொங்கல் பண்டிகையை நெருங்கும் வேளையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவான தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இது படிப்படியாகத் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கும்.
ஜனவரி 7 & 8 (இன்று மற்றும் நாளை): கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை): மழையின் தீவிரம் அதிகரிக்கும் நாள்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10 (சனிக்கிழமை) கடலோரத் தமிழகத்தின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஜனவரி 11 (ஞாயிற்றுக்கிழமை): வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் கனமழை தொடரும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை):
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29°C ஆகவும், குறைந்தபட்சம் 23-24°C ஆகவும் இருக்கும். 10 மற்றும் 11-ம் தேதிகளில் தான் சென்னைக்குக் கனமழை வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவுவதால், சாலைப் பயணங்களின் போது முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவது அவசியம்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மைத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
