திருப்பரங்குன்றம் மலை ஏறிச் செல்ல 19 நாட்களுக்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி! என்ன நிபந்தனை?!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லப் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சுமார் 19 நாட்களுக்குப் பிறகு இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவால், காசி விஸ்வநாதர் கோயில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல இன்று மதியம் 12.30 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி அனைத்து தரப்பினரும் மலைக்குச் செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலைக்குச் செல்பவர்கள் பாதுகாப்பு கருதி தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணை நுழைவாயிலில் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், கடந்த 19 நாட்களாகப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், வரும் ஜனவரி 6-ம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் 'பிறை கொடி' ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெரிய ரத வீதி மற்றும் கோட்டை தெரு வழியாகக் கொண்டு செல்லப்பட்ட இந்தக் கொடி, மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்றப்பட்டது.

இஸ்லாமிய சமூகத்தினருக்கு மட்டும் இதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்து சமய பக்தர்களுக்கும், இதர பொதுமக்களுக்கும் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றத்தில் சமயம் கடந்த நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைப் பாதை திறக்கப்பட்டுள்ளதால், இன்று மதியம் முதலே பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
