திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்: 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர் தரிசனம்!
உலகப் புகழ்பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர். கூட்ட நெரிசல் காரணமாகப் பொது தரிசன வழியில் பக்தர்கள் சுமார் 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நாள் முதல் பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்பட்டது. தீபத் திருவிழா நாளில் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் பலர் இன்று வருகை தந்தனர்.
குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசை, கோவில் வளாகம் மட்டுமல்லாமல், கோவில் வெளியே உள்ள வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு மற்றும் தேரடி வீதி எனச் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு காணப்பட்டது.

பக்தர்கள் தொடர்ந்து கிரிவலமும் சென்ற வண்ணம் இருந்ததால், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கக் கோவில்களிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பைக் கருதிப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
